நாளை மகாளய அமாவாசை: திருச்சி அம்மா மண்டபத்தில் திதி கொடுக்க தடை
கொரோனா நடவடிக்கை காரணமாக நாளை மகாளய அமாவாசையன்று திருச்சி அம்மா மண்டபத்தில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று சமூகப் பரவலைத் தடுத்திடும் நடவடிக்கையாக நாளை (6.10.2021) புதன்கிழமை புரட்டாசி (மஹாளய) அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மக்கள் கூடி திதி கொடுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது.
மேலும் காவிரி ஆற்றின் அனைத்து கரைப் பகுதிகளிலும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்த்து கொரோனா பரவலைத் தடுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கிடும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.