தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர்காலத்தில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடைபெற்றது
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் முன்னிலையில் பேரிடர் கால தீயணைப்புத்துறை சார்பில் ஒத்திகை நடத்தி காண்பிக்கப்பட்டது
பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கான வழிமுறைகள்.வெள்ள எச்சரிக்கை வந்தவுடன் குடிநீர் ஈரப்பதம் இல்லா உணவு மற்றும் குழந்தைகளுக்கான உணவுடன் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும்.
வீட்டிலுள்ள விலை உயர்ந்த பொருட்களையும் மற்றும் ஆவணங்களையும் வீட்டின் உயரமான இடத்தில் கட்டி தொங்க விடவும் அல்லது பாலிதீன் பைகளில் அடைத்து ஆழமான நிலத்தடியில் பத்திரப்படுத்த வேண்டும். கால்நடைகளை மேட்டுப்பாங்கான பகுதிக்கு அழைத்துச் சென்று அப்புறப்படுத்தி அவைகளுக்கான தீவனம் மற்றும் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்.
அவ்வப்போது ஏற்படுகின்ற சீற்றங்களை குறித்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மூலம் செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டும். பயிர்கள் மற்றும் வீட்டு பொருட்களை காப்பீடு செய்ய வேண்டும். மின்சாதன இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட வேண்டும்.
குடிநீரை நச்சுத்தன்மை பரவாமல் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். பாம்புகளால் வரும் அபாயத்தை தவிர்க்க வேண்டும் உணவுப் பொருட்களை மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும். மேலும், தீயணைப்பு துறையில் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்களை வைத்து ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர், தீ விபத்திலிருந்து எவ்வாறு பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நடத்தப்பட்டது. அப்போது தீயணைப்பு வீரர் ஒருவரின் மீது தீ பற்ற வைத்து அதனை சக வீரர்கள் அணைக்கின்ற ஒத்திகை நடைபெற்றது. திடீரென்று அந்த வீரர் மீது அதிக அளவில் தீ பரவ ஆரம்பித்ததால் உடனடியாக அவர் எழுந்தவுடன் தீ அணைக்கப்பட்டது. இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.