அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்பும் அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும்.. அமைச்சர் நேரு தகவல்

மாநகராட்சி அடிப்படை பணியிடங்களுக்கு அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவது தொடர்பான அரசாணை மறுபரிசீலனை செய்யப்படும் என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Update: 2022-11-19 11:17 GMT

திருச்சியில் பேட்டியளித்த அமைச்சர் நேரு.

தமிழகம் முழவதும் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவு வார விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது, மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான பாராட்டு தெரிவித்து கேடயங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நேரு வழங்கினார். மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு பணியாளர்களுக்கும் பரிசுகளை அமைச்சர் நேரு நிகழ்ச்சியின்போது வழங்கினார்.

மேலும், பயிர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், மத்திய காலக்கடன், கால்நடை வளர்ப்பு கடன், சுய உதவி குழு கடன், வீட்டு வசதி கடன், வீட்டு அடமான கடன், சம்பளச் சான்று கடன், கைம் பெண்களுக்கான கடன் என 1365 பயனாளிகளுக்கு 8.90 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலர்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். நகராட்சி நிர்வாக துறையும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கியது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம். வருங்காலத்தில் அங்கும் பாதிக்கப்படாத வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து இடங்களிலும் தற்காப்பு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சில இடங்களில் விவசாயப் பணிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். அது குறித்து முதலமைச்சரிடமும், துறை அமைச்சரிடமும் பேசி உள்ளேன். விரைவாக போதிய யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு சங்களில் பழைய நிலையிலேயே கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் கூறியுள்ளார். திருச்சி காவேரி பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் நிறைவடையும்.

மாநகராட்சி அடிப்படை பணிகளுக்கு அவுட்சோர்ஸ்சிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த அரசாணையை மறுபரீசிலனை செய்வது குறித்து முதலமைச்சரிடம் பேசிவிட்டு முடிவு செய்யப்படும். அடிப்படை பணிகள் முதல் அனைத்து பணியிடங்களும் அரசு பணிகளாகவே நிரப்ப முயற்சி செய்து வருகிறோம் என நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

Tags:    

Similar News