வணிகர்களின் குடும்ப நல நிதி உயர்த்தி வழங்கப்படும்: வணிகர் சங்க மாநாட்டில் முதலமைச்சர் அறிவிப்பு!
வணிகர் குடும்பநல இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு;
வணிகர் நல வாரியத்தின் மூலமாக, இப்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர்களின் இறப்புக்கான குடும்பநல இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
39-வது வணிகர் தினத்தையொட்டி திருச்சிராப்பள்ளியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 'வணிகர் விடியல் மாநாடு' நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசும்போது வணிகர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் ஆற்றிய உரையாவது:
இந்த மாநாட்டிற்கு நான் வருவதற்கு முன்பு தமிழகக் காவல்துறையின் தலைவர் டி.ஜி.பி. அவர்களிடத்தில் ஆலோசனை செய்தேன். அதன் விளைவாக, சில வாரங்களுக்கு முன்பு நான் அறிமுகம் செய்து வைத்த 'காவல் உதவி செயலி'-இல் வணிகர்கள் உதவி என்ற ஒரு புதிய பகுதியும் அதில் சேர்க்கப்படும் என்ற நல்ல செய்தியை உங்களிடத்தின் நான் தெரிவித்துக் கொள்கிறேன். வணிகர்களுக்கு யாராவது தொல்லை கொடுக்க நேரிட்டால், செயலியில் சேர்க்கப்பட்டுள்ள இந்தப் புதிய பகுதியில் காவல்துறையின் உதவியை நீங்கள் கோரலாம். உடனடியாக ரோந்து வாகன காவலர்கள் விரைந்து வந்து தகராறு செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கையை நிச்சயமாக, உறுதியாக எடுப்பார்கள்.
வணிகர்களை பாதுகாக்கின்ற இந்த வசதி இன்னும் ஓரிரு வாரத்தில் துவங்கப் போகிறது என்ற செய்தியையும் நான் மகிழ்ச்சியோடு இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். என்னுடைய தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய வணிகர் நல வாரியத்தில் செயல்பாடுகளை மேம்படுத்த உங்களிடையே இருந்து புதிய உறுப்பினர்களை நியமிக்க இருக்கிறேன். இதனால், வாரியத்துக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டு அனைத்து நலத்திட்டப் பணிகளும் முடுக்கி விடப்படும்.
வணிகர் நல வாரியத்தின் மூலமாக, இப்போது வழங்கப்பட்டு வரும் உறுப்பினர்களின் இறப்புக்கான குடும்பநல இழப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தீ விபத்துகளில் பாதிக்கப்படும் வணிகர்களுக்கான உடனடி இழப்பீடு 5,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பாலங்கள், மெட்ரோ இரயில் போன்ற பல்வேறு பணிகள் நடைபெறுகிற நேரத்தில், அதனால் பாதிக்கப்பட்டுக் கடைகளை இழக்கக்கூடிய வணிகர்களுக்கு, அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக வாடகைக் கடைகளை வழங்குவதில் நிச்சயமாக, உறுதியாக முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் தெரிவித்துள்ளார்.