திருவெறும்பூர் அருகே கோவிட் விழிப்புணர்வு, தூய்மை இந்தியா பணிகள்

திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயனேரி கிராமத்தில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு, விடுதலைப் பெருவிழா, தூய்மை இந்தியா பணிகள்

Update: 2022-01-02 03:02 GMT

திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயனேரி கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், திருவெறும்பூர் அருகே உள்ள தேவராயனேரி கிராமத்தில் கோவிட் தடுப்பூசி விழிப்புணர்வு, விடுதலைப் பெருவிழா, தூய்மை இந்தியா பணிகள் நடைபெற்றன.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்குட்பட்ட திருச்சிராப்பள்ளி மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட தேவராயனேரி கிராமத்தில் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு முகாம் 31.12.2021 அன்று நடைபெற்றது. இந்த முகாமின் போது கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம், தூய்மை இந்தியா இயக்கம், மண் வள ஆரோக்கிய அட்டை, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், இந்திர தனுஷ் தடுப்பூசி இயக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருநெடுங்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார், இந்த ஊராட்சிக்குட்பட்ட அனைத்து மக்களும் தவறாமல் கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மேலும் கிராமத்தை தூய்மையாக பராமரிப்பதுடன், குப்பைக்கழிவுகளை பொது இடங்களில் போட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

சிறப்புரையாற்றிய திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ஜோசப் கென்னடி, அனைவரும் தவறாமல் கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். மேலும் பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் திருநெடுங்குளம் ஊராட்சியில் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.

பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் ஏ.சாந்தி, டாக்டர் எஸ்.சாவித்திரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.லலிதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்.சுகுமாரன், அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் சரவணன், மக்கள் தொடர்பு கள அலுவலர் கே.தேவி பத்மநாபன், ஒன்றிய கவுன்சிலர் சுபத்ரா சுப்பிரமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News