துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை

துறையூர் யூனியனில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை மேற் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-08-06 07:07 GMT

துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் (பைல் படம்)

திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

துறையூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த 2020ம் ஆண்டு பிளீச்சிங் பவுடர், லைசால், சொல்யூசன், பவர் ஸ்பிரேயர் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட்டன.

அதில் 3 பில்களில் மொத்தம் 18 லட்சத்து 44 ஆயிரத்து 636க்கு பொருட்கள் வாங்கியதாக கூறப்படுவதில் பொருட்களை வாங்காமல், வாங்கியதாக கணக்கு காட்டி முறைகேடு செய்ததாகவும்,

துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13 இடங்களில் மினி மாஸ் விளக்குகள் தரமற்ற முறையில் அமைத்து முறைகேடு செய்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்த சுயேச்சை கவுன்சிலர் அசோகன் லஞ்ச ஒழிப்புத்துறை, கலெக்டர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், உதவி இயக்குனர் (ஊராட்சி), உதவி இயக்குனர் (தணிக்கை) உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்திருந்தார்.

இதில் நடவடிக்கையும் எடுக்காத பட்சததில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, உதவி இயக்குனர் (ஊராட்சி), கலெக்டர் உள்ளிட்டோர் விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.

அதன்பேரில் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 3பேர் (2 பெண் போலீசார், 1ஆண் போலீசார்) விசாரணை மேற்கொண்டனர்.

காலை முதல் மாலை வரை துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News