ரங்கநாதரிடர் சீர் வாங்கிய தங்கை சமயபுரம் மாரியம்மன்
தைபூச விழாவில் அண்ணன் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் அவரது தங்கையான சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு யானை, குதிரைகளில் பூ, மாலை, பட்டு புடவைகள், பழங்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசையாக கொடுக்கும் விழா நடைப்பெற்றது;
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப் பூசத் திருவிழா கடந்த 19 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 10 ம் திரு நாளான இன்று அம்மன் காலை ஆஸ்தான மண்டபத்திலிருந்து கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளி மண்ணச்சநல்லூர், நொச்சியம் வழியாக வட காவிரிக்கு சென்று மாலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் 11 மணி வரை அண்ணன் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் அவரது தங்கையான சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு யானை, குதிரைகளில் பூ, மாலை, பட்டு புடவைகள், பழங்கள், கரும்பு உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசையாக கொடுக்கும் விழா நடைப்பெற்றது. பின்னர் 1 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், அதிகாலை 3 மணிக்கு மேல் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நாளை காலை வட காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம்,மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறது. அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைப்பெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடிபடம் இறக்கப்படுகிறது. பின்னர் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று மூலஸ்தானம் சென்றடைகிறது.
விழாவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் இணை ஆணையர் கூடுதல் பொறுப்பு மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையருமான அசோக்குமார் மற்றும் இரு கோயில்களின் பணியாளர்களும், பக்தர்களும் திரளானோர் பங்கேற்றனர்.