தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். - கூட்டத்தில் வலியுறுத்தல்.;
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள ராணா கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் நெல்சன் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சைவராசு வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சண்முகநாதன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியங்கள், ஊதிய உயர்வுகள், சிறப்பு நிலை ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றை திரும்ப வழங்க வேண்டும். தமிழகத்தில் சாதாரண நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்களின் புதிய ஓய்வூதிய முறையை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்க வேண்டும். தாய்மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் 80 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் கல்வி பயிற்று மொழியாக, ஆட்சி அலுவல் மொழியாக, வழக்காடுமன்ற மொழியாக, வழிபாட்டு மொழியாக தமிழ்மொழி முன்னிலைப்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இத்தகைய 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி முதல்வாரத்தில் கோரிக்கை முழக்க போராட்டம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சார்பில் திருச்சியில் நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.