திருச்செந்தூரில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாகனங்கள் பறிமுதல்: ஆட்சியர்

திருச்செந்தூரில் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Update: 2023-09-04 01:15 GMT

திருச்செந்தூரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்துச் செல்கின்றனர். திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி விழா, வைகாசி விசாகம் போன்ற நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் கோயில் வளாகத்தில் திரண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

இந்த நிலையில், திருச்செந்தூரில் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையெடுத்து, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கம்படி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆட்டோ ஓட்டுநர்களிடமும், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதனை முறைப்படுத்தி நியாயமான கட்டணங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு திருச்செந்தூர் நகரில் 30 ஆம்னி பேருந்துகளில் சோதனை செய்தார். அதில், விதிகளை மீறியதாக 6 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டு மொத்தம் ரூ . 7,500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மேலும், ஆம்னி பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்காமல் குறிப்பாக சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் நியாயமான கட்டணம்தான் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறும் வாகனங்களை சட்டப்படி பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News