127 பசு மடங்களை மேம்படுத்த ரூ. 24 கோடியில் பணிகள்: அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் 123 திருக்கோயில்களில் இருக்கின்ற 127 பசு மடங்களை மேம்படுத்துவதற்கு ரூ. 24.08 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம் மற்றும் பசுமடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் இன்று அடிக்கல் நாட்டினர்.
தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பசுமடங்கள் காப்பதற்கென்று பல்வேறு முனைப்பான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தீட்டி செயல்படுத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் உள்ள 123 திருக்கோயில்களில் இருக்கின்ற 127 பசுமடங்களை மேம்படுத்துவதற்கு ரூ. 24.08 கோடி செலவில் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்துக்கு கடந்த ஆண்டு வந்த லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்து வசதிகளையும் திராவிட மாடல் ஆட்சி செய்து கொடுத்தது. அதேபோல் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் இணைந்து மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பில் நடைபெறும் பெருந்திட்ட வளாகப்பணிகள் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
2025 ஆம் ஆண்டுக்குள் நேர்த்தியாக கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அடுத்த 50 ஆண்டுகளுக்கு பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் விளங்கும் வகையில் உயர்தரத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது எச்.சி.எல். நிறுவனத்தின் மூலம் 20 பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசின் சார்பில் 18 பணிகள் வருகிற கார்த்திகை மாதத்திற்குள் துவங்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கூடுதலாக ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டு யாத்திரி நிவாஸ் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 45 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன் மற்றும் அலுவலர்கள், கலந்து கொண்டனர்.