உடன்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய கேண்டீனுக்கு சீல் வைப்பு...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேணா மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரது வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்று தொழில் புரிய வலியுறுத்தி, மாவட்ட அரசிதழ் மற்றும் பத்திரிகைகளில் பொது அறிவிப்பு பிரசுரித்தல், பத்திரிக்கை செய்திக்குறிப்பு வெளியீடுதல், விழிப்புணர்வு கூட்டங்கள் மற்றும் உரிமம் வழங்கும் மேளா போன்றவற்றை உணவு பாதுகாப்புத் துறையானது நடத்தி வந்தது.
இருப்பினும், மாவட்டத்தில் இன்னும் பல உணவுத் தொழில் சார்ந்த வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமமின்றி தொழில்புரிந்து வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, வணிகர்களின் இந்த சட்ட விதிமீறலை தடுக்கும் வண்ணம், திடீர் ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை தொடங்கி உள்ளது.
ஏற்கெனவே கடந்த நவம்பரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, உரிமம் இல்லாத நிறுவனங்கள் மூடப்பட்டு, உரிமம் பெற்ற பின்னர் திறக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்திரவின் பேரில், உடன்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் தலைமையிலான அதிகாரிகள் உடன்குடி அனல் மின்நிலையம் அருகே இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஷபா கேண்டின் என்ற உணவகம் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. எனவே, உடனடியாக அந்தக் கேண்டீனை மூடுவதற்கு உரிய ஆணையை மாவட்ட நியமன அலுவலரிடம் பெற்று, மேற்படி ஷபா கேண்டீனானது மூடி முத்திரையிடப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:
மாவட்டத்தில் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தினை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும்.
உணவுப் பொருள் சார்ந்த வணிகர்கள் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளின் தொழில் வரி ரசீதினை மட்டும் கொண்டு உணவுத் தொழில் புரிய இயலாது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 31-இன் கீழ் அனைத்து உணவு சார்ந்த வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற பின்னர்தான், உணவுத் தொழில் தொடங்க வேண்டும். மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை நீதிக்குட்பட்டு அநேக விழிப்புணர்வுகளும், அறிவிப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளதால், இனிவரும் நாட்களில், எந்த உணவு வணிகராவது, உணவு பாதுகாப்பு உரிமமின்றி உணவுத் தொழில் புரிவது ஆய்வின் போது கண்டறியப்பட்டால், நிறுவனம் அல்லது கடையை மூடி முத்திரையிடப்படும் என்றும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 55, 58 மற்றும் 63-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்படுகின்றது.
எனவே, மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் புரியும் உணவு சம்பந்தப்பட்ட வணிகர்கள், சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, உடனடியாக உணவு பாதுகாப்பு உரிமத்தினை பெற்றிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் உள்ள வணிகர்களுக்குத் தான், உணவுப் பொருள் தாயரிப்பு நிறுவனங்கள் அல்லது விநியோகஸ்தர்கள் தமது தயாரிப்புகள் அல்லது பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்.
தவறினால், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் பிரிவு 55, 58 மற்றும் 63-இன் கீழ் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள்ஸ, விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும் என மாரியப்பன் தெரிவித்தார்.