சாத்தான்குளத்தில் 160 பனைத் தொழிலாளர்களுக்கு ரூ. 12 லட்சம் தளவாடப் பொருட்கள் வழங்கல்
சாத்தான்குளம் அருகே 160 பனைத் தொழிலாளர்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் பனைத் தொழிலுக்கு சிறப்பு வாய்ந்த நிலையில், உடன்குடி கருப்பட்டி என்றால் தனி சிறப்பு பெற்றிருக்கிறது. அதற்குக் காரணம் உடன்குடி கருப்பட்டி சுவை மிக்கதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருந்து வருகிறது.
இதனால் உலக அளவில் உடன்குடி கருப்பட்டிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. ஆனாலும் பனைத் தொழில் மிகுந்த கஷ்டமான தொழில் என்பதினாலும், இடைத்தரகர்களின் செயல்பாட்டினாலும், பனை தொழிலாளிக்கு தகுந்த வருவாய் இல்லாத காரணத்தினாலும், பனைத் தொழிலை இழிவான தொழிலாக பார்த்த காரணத்தினாலும், பனைத் தொழிலாளர்கள் தொழிலை விட்டு வெளியேறினர்.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பனை தொழில் நலிவடைந்து, அழிந்து வருகிறது. இந்த நிலையில், பாரம்பரிய தொழிலை போற்றி பாதுகாக்க, பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என்பதற்காக மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு அமைச்சகத்தின், கதர் கிராம தொழில்கள் ஆணையம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழுவை சார்ந்த உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் 5 நாட்கள் தொடர்ந்து 3 கட்டங்களாக பதநீர் மற்றும் கருப்பட்டியில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பயிற்சி பெற்ற மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழுவை சார்ந்த பனைத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கருப்பட்டி காய்ச்ச தேவையான தளவாட பொருட்கள் வழங்கும் விழா சாத்தான்குளம் அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்தவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும்,தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான கென்னடி வரவேற்றார். சென்னையில் உள்ள மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய முதல்வர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாநில கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைய உதவி இயக்குனர் செல்வி கருணாநிதி குத்து விளக்கு ஏற்றி பனைத் தொழிலாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
அதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் பவுலோஸ், தூத்துக்குடி சர்வவேதய சங்க செயலாளர் ராஜன், மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் பிரபாகரன்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மதர் பனை பொருள் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களின் ஒவ்வொரு குடும்பத்தைச் சார்ந்த பனை தொழிலாளர்களுக்கும் தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அதாவது, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பதநீர் காய்ச்சி கருப்பட்டி தயார் செய்ய தேவையான ஒரு கடாய், பதநீரை சேமித்து எடுத்துவர 10 லிட்டர் அளவு கொண்ட 4 கேன், கருப்பட்டி ஊற்ற 4 மர அச்சு, ஒரு மர துடுப்பு, ஒரு எல்பிஜி பர்னர் என மொத்தம் 11 வகையான தேவையான அனைத்து தளவாட பொருள்களும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில துணைத் தலைவர் சுதாகர், தென் மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி மாவட்ட தலைவருமான ராஜ்கமல், தூத்துக்குடி மாவட்ட துணைத் தலைவர் இம்மானுவேல், காயல்பட்டினம் நகர தலைவர் காயல் பாலா, மதர் பனைப் பொருள் உற்பத்தியாளர் மகளிர் குழுக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெப செல்வி, தமிழரசி, ஆலிஸ் மேரி, தமிழ்ச்செல்வி, இந்து, ஷர்மிளா, புனிதா மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் பானுமதி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மத்திய பனை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய உதவி இயக்குநர் பிரபாகரன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடி, ஒருங்கிணைப்பாளர் பானுமதி ஆகியோர் செய்து இருந்தனர்.