மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி ஊராட்சி ஒன்றியம், நயினார்பத்து கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்தி நீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும், தண்ணீரின் சிறப்பை எடுத்து சொல்வதற்கும், தண்ணீர் வீணாவதை தடுப்பதற்கும் முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிறுதானியத்தின் பயன்கள் குறித்தும் கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
நமது முன்னோர்கள் சிறுதானியங்களை அதிக அளவில் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு சிறுதானியம் பயிரிட தேயைவான வேளாண் இடுபொருட்களை வழங்குவதற்கு யாராக இருக்கிறோம். வழக்கமாக வருடத்திற்கு 4 முறைதான் கிராம சபைக்கூட்டம் நடைபெற்று வந்தது.
ஊரக வளர்ச்சித்துறை மூலம் வருடத்திற்கு 6 கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியில் 15 ஆவது நிதிக்குழு, பள்ளிக்கட்டிடங்கள் கட்டும் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஆகியவற்றின் மூலம் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களிடம் தெரிவித்து உள்ளோம்.
தூய்மை பணியாளர்கள் கூடுதலாக ஊதியம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார்கள். தற்போது ரூ. 120 கூலி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள கோரிக்கை என்பதால் அரசிடம் தெரிவித்து இதுகுறித்து உரிய தீர்வு காணப்படும். கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை தெரிவித்தால் தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
கூட்டத்தில், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, வேளாண் இணை இயக்குநர் பழனி வேலாயுதம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) லோகநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்டின்ராணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.