வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை.. தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி...

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.;

Update: 2023-03-10 05:06 GMT

தூத்துக்குடி மாவட்டம், கல்லாமொழியில் வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.

தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக வதந்தி பரவியதால் பலர் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் யாரும் தாக்கப்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மாநிலம் முழுவதும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர், காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அனல்மின் நிலையப் பணியில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுடன் அவர்களது தேவையை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டம் கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடினேன். தமிழ்நாடு அரசினால், வெளிமாநில தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தேவையான வசதிகள் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்களது குறைகள் தொடர்பாக தொழிலாளர் நலத்துறையில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர்களிடம் கலந்துரையாடினேன். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் உடனடியாக தீர்வு காணப்படும்.

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்தவித பிரச்னையும் வரக்கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அனல் மின் நிலையம், துறைமுகம், விமான நிலையம் என பல்வேறு இடங்களில் வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தின் வளர்ச்சிப் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் பயப்படத் தேவையில்லை.

வெளிமாநில தொழிலாளர்களுடன் இங்குள்ளவர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள குழுவினை தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர் நலத்துறையினர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தருவைக்குளம், குலசேகரப்பட்டிணம், பெரியதாழை ஆகிய 3 இடங்களில் முதல்வர் திறந்து வைத்த மீன்பிடி இறங்குதளத்தினை பார்வையிட்டேன். இந்தப் பகுதியில் 2 மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளும் மே 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

Tags:    

Similar News