திருச்செந்தூர் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மாசித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன் பன்னிரெண்டு நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் .
இதை முன்னிட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ம்படி, படிசெப்பு ஸ்தலத்தார் கோபாலகிருஷ்ணன் அய்யர் யானை மீது கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார்.
கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டம் கொண்டுவரப்பட்டு 5.30 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.
திருவிழா மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய விழாவான 5ம் திருவிழா 24ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழாவான 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப் பெருமான் உருகு சட்டசேவையை தொடர்ந்து சுவாமி வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார். மாலை 4.30 மணிக்கு தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளுகின்றார்.
26-ம் தேதி 2-ம் திருவிழாவான அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமாள் புறப்பாடு நடக்கிறது.
3-ம் திருவிழா 27-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.
4-ம் திருவிழா 28-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
5-ம் திருவிழா 1-ம் தேதி (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மேல் குட வருவாயில் தீபாரதனை நடக்கிறது.
6-ம் திருவிழா 2-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது
7-ம் திருவிழாவான 3-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அன்று அதிகாலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9 மணி சுவாமி சண்முகர் வெற்றிவேல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஷண்முகர் சிவப்பு சாத்திக்கோலத்தில் எழுந்தருளி 8 ரத வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் வந்தடைகிறது.
8-ம் திருவிழாவின் 4-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்று பகல் 11.30 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழா 5-ம் தேதி சண்முகர் சேர்க்கையை பொறுத்து பூஜை காலங்கள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அன்று காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
11-ம் திருவிழாவான 7-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது. அன்று இரவு 10:30 மணிக்கு மேல் தெப்ப உற்சவம் நடக்கிறது.