திருச்செந்தூர் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு? காவல் துறை மறுப்பு

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டு இல்லை என காவல் துறை மறுத்துள்ளது.

Update: 2023-03-11 08:26 GMT

திருச்செந்தூர் கோயில் கடற்கரை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருள்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது கோயில் நாழிகிணறு கடற்கரை பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக்கூடிய வெடிபொருள் ஒன்று கிடந்தது.

இது குறித்து பக்தர்கள் கோயில் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, கோயில் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வெடிபொருளை கைப்பற்றினார். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் நாட்டு வெடிகுண்டு கிடந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு நிலவியது. இருப்பினும், அது சாதாரண நாட்டு பட்டாசு தான் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காவல் துறை மறுப்பு:

இந்த விவகாரம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் இன்று (11.03.2023) மர்ம பொருள் கிடப்பதாக திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்திற்கு வந்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த்ராஜ் மேற்பார்வையில் துரிதமாக நடவடிக்கை எடுத்து மர்ம பொருளை கண்டுபிடிக்க வெடிகுண்டு நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோயில் காவல் நிலைய போலீஸார், காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் குழுவுடன் (Bomb Detection and Disposal Squad - BDDS) சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

மேலும், கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருளை சோதனை செய்ததில், அது திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசு என்பதும், அதுவும் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது என காவல் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News