திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.9ல் தை உத்திர வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.9ல் தை உத்திர வருஷாபிஷேகம்நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-02-07 11:29 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் (கோப்பு படம்).

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.9ல் தை உத்திர வருஷாபிஷேகம் நடைபெற உள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது கடைவீடு திருச்செந்தூர். இக்கோவிலில்  தைப்பூசம், மாசித்திருவிழா மற்றும் கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில்  திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக் கோயிலில் இந்த ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகம் பிப்.9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை செய்யப்பட்ட, தை உத்திர நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடைபெறும். நிகழ் ஆண்டு தை உத்திர வருஷாபிஷேகம் பிப்.9 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. இரவு சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகின்றனா்.

திருக்கோயிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன் மலா்களை (கேந்திப் பூக்களை தவிர) அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் வழங்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News