தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி திசையன்விளை ரோட்டில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் இணைப்புச் சாலையை புதுப்பித்து தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடன்குடியில் இருந்து திசையன்விளை செல்லும் சாலை ஒரு முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலையாகும். திசையன்விளை, தட்டார்மடம், கொம்மடிக்கோட்டை, மணிநகர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வரும் வாகனங்கள் உடன்குடி ஊருக்குள் வருவதற்கு முன்பே, மெய்யூர் அருகே ஒரு பிரிவு ரோட்டில் பிரிந்து சென்று கொட்டங்காடு குலசேகரன்பட்டினம் வழியாக திருச்செந்தூர் செல்வதற்கு ஒரு பைபாஸ் சாலை உள்ளது.
இந்த சாலையில் மெய்யூர் முதல் கொட்டங்காடு வரை உள்ள இணைப்பு சாலை குண்டும் குழியுமாக பயணத்திற்கு பயன்படாத சாலையாக இருந்தது. இதை புதுப்பித்து போடுவதற்காக கற்களை குவியல் குவியலாக ,ரோட்டின் குறுக்கே குவித்து வைத்துவிட்டனர். இதனால் இவ்வழியாக போக்குவரத்து தடைபட்டது. சுமார் ஒரு மாதமாக இந்த ஜல்லி குவியல்கள் அப்படியே கிடக்கிறது. உடனடியாக இந்த சாலையை புதுப்பித்து போடும் பணியை தொடங்க வேண்டும் என்று இப்பகுதியில் உள்ள பொதுமக்களும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.