குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம்...
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
கர்நாடக மாநிலம், மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றதாக கருதப்படுவது தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஆகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா விழாவில் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்வது உண்டு. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா விழாவிற்கு வந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனை தரிசித்துச் செல்வர்.
மேலும், இந்தக் கோயிலில் ஆடி மாதம் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பிரசித்தி பெற்றவை ஆகும். இந்த நிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் 1008 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி மாலை அரசடி விநாயகர் கோயிலில் முத்தாரம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை யும், 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி மகா கணபதி பூஜை, மகாலட்சுமி ஹோமம், 108 கலச பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் சிதம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. பின்னர், அங்கிருந்து அம்மனுக்கு சீர்வரிசை செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோயிலில் இருந்து 1008 பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
முக்கிய வீதிகள் வழியாக சென்றபடி பால்குடி ஊற்வலம் முத்தாரம்மன் கோயிலுக்கு வந்துடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. மேலும், 108 சங்கு கலச அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதன் பின்னர் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை, 1008 திருவிளக்கு பூஜை, அம்மன் தேரில் பவனி, பைரவருக்கு வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காமதேனு குழு அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர், ராஜலட்சுமி வழிபாட்டு குழு, முத்தாரம்மன் தசரா நண்பர்கள் அன்னதான குழு ஆகியோர் செய்து இருந்தனர்.