நர்சு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் பணம் மோசடி : 3 பேர் மீது வழக்கு.
ஒரு முகநூல் பக்கத்தில் அமெரிக்காவில் நர்சு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரம் இருந்ததைப்பார்த்து ஏமாந்துள்ளார்
அமெரிக்காவில் நர்சு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.10½ லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தை சேர்ந்தவர் பாப்சிதா பீரிஸ் ( 42). இவர் வெளிநாட்டில் நர்சாக பணியாற்றுவதற்காக வாய்ப்பு குறித்து இணையதளத்தில் தேடி உள்ளார். அப்போது ஒரு முகநூல் பக்கத்தில் அமெரிக்காவில் நர்சு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாக ஒரு விளம்பரம் இருந்தது. அதனை பார்த்த பாப்சிதா பீரிஸ், அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
அப்போது ஜீன் என்பவர் பேசி, ரூ.35 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டாராம். தொடர்ந்து அவர், அந்த ஆஸ்பத்திரியின் மேலாளர் ஜார்ஜ் கென்னட் மற்றும் முகவர் அகமது ராஜேஷ் என்று கூறி 2 பேரை அறிமுகம் செய்து உள்ளார். அவர்கள், விசா உள்ளிட்ட பல்வேறு நடைமுறை செலவுகளுக்கு தேவைப்படுவதாகக்கூறி ரூ.10 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் பெற்று உள்ளனர். ஆனால் அவர்கள் ஓராண்டுக்கு மேலாகியும் பாப்சிதா பீரிசுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாப்சிதாபீரிஷ், தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஜீன், ஜார்ஜ் கென்னட், அகமது ராஜேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.