திருச்செந்தூர் கடலில் அதிசயம்: பக்தர் தவற விட்ட 5 சவரன் தங்க காப்பு மீட்பு

திருச்செந்தூர் கடலில் கரூரை சேர்ந்த பக்தர் ஒருவர் தவறவிட்ட 5 சவரன் தங்க காப்பு இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது.

Update: 2023-04-04 08:40 GMT

திருச்செந்தூர் கடலில் இருந்து மீட்கப்பட்ட தங்ககாப்பை கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.

உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். கோயிலுக்கு வருவோர் கடலில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, கடலில் புனித நீராடிய பக்தர் ஒருவரின் 5 சவரன் தங்கக் காப்பு திடீரென மாயமான நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு கிடைத்த சம்பவம் பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் கார்த்திக். இவர் தேன்மொழி பேப்ரிஸ் என்ற பெயரில் டெக்ஸ்டைல்ஸ் வைத்துள்ளார். இவர் கடந்த 1 ஆம் தேதியன்று தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் அனைவரும் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனராம்.

அப்போது கார்த்திக் மகன் ஸ்ரீராம்(22). கையில் அணிந்திருந்த 5 சவரன் தங்கக்காப்பு திடீரென கடலில் தவறி விழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உடனடியாக அங்கிருந்த கோவில் கடல் பக்தர்கள் பாதுகாப்பு குழுவினர் சுமார் ஒரு மணி நேரம் தேடியும் தங்கக்காப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தொழிலதிபர் கார்த்திக் தான் தொழில் தொடங்கிய ஆரம்பக்காலத்தில் முதன் முதலாக மகன் ஸ்ரீராமுக்கு வாங்கிக் கொடுத்த தங்கக்காப்பு என்பதால் முருகனிடம் மனம் உருகி வேண்டிச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் தொடர்ந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த கடல் பக்தர் பாதுகாப்பு குழுவினர் கடலில் தவறிய 5 சவரன் தங்க காப்பினை மீட்டு கார்த்திக்கிற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று திருச்செந்தூர் வந்த கார்த்திக்கிடம் தங்க காப்பினை அவர்கள் கொடுத்தனர். முதல் முறையாக மகனுக்கு ஆசையுடன் வாங்கி கொடுத்த பொருள் கிடைத்த ஆனந்தத்தில் கார்த்திக் கடல் பாதுகாப்பு குழுவினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டியதால் தவறிய பொருள் மீண்டும் கிடைத்துள்ளதாகவும் அந்த கடவுளே தேடி கண்டுபிடித்து கொடுத்துள்ளதாகவும் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Tags:    

Similar News