மாவட்டந்தோறும் 10 இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான தேவையை மேம்படுத்த நடவடிக்கை
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்கள் தேர்வுசெய்யப்பட்டு சுற்றுலாவுக்கு தேவையான பணிகள் மேம்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில், சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் ஓட்டல் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்துவது குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், சுற்றுலா வளர்ச்சிக் கழக மதுரை மண்டலமேலாளர் டேவிட் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் பேரில், தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் களஆய்வு செய்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். திருச்செந்தூரில் 1967ஆம் ஆண்டில் இருந்து ஓட்டல் தமிழ்நாடு 4.57ஏக்கரில் 47 அறைகளுடன் இயங்கிவருகிறது. மேலும், கூடுதல் அறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருச்செந்தூரில் மற்ற எந்தவொரு ஓட்டல்களிலும் ஓட்டல் தமிழ்நாடு அளவுக்கு அதிக இடவசதி கிடையாது. தற்போதுஓட்டல் தமிழ்நாட்டில் உள்ள படுக்கைகள் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிதாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும், இங்குவரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக சுமார் 55ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரிசெய்து வருகிறோம்.ஓராண்டுக்குள் பழுதுகள் முழுமையாகச ரிசெய்யப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கடற்கரைப் பகுதியை கடல்நீர் சாகச விளையாட்டுகள் அடங்கிய சுற்றுலாதலமாக ஏற்படுத்த ரூ.1.70 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை தொடங்குவது தொடர்பாக நேரில் சென்று களஆய்வு செய்தோம். இந்தத் திட்டத்திற்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக நிர்வாகத்திடம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.45.46 லட்சம் முதற்கட்டமாக பெறப்பட்டு சாகச விளையாட்டுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. முள்ளக்காடு கடற்கரை கோவளம் கடற்கரையைப்போல் நன்றாகமேம்படுத்தப்படும்.
முதலமைச்சர் உத்தரவின்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குலசேகரப்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் மற்றும் மணப்பாடு சிலுவைக் கோயில் ஆகிய 2 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக அடுத்த ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.