திருச்செந்தூர் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்ய அனுமதி?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளூர் பக்தர்களுக்கு கட்டணமின்றி தரிசனம் செய்ய அனுமதி தொடர்பாக நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2023-12-16 13:10 GMT

திருச்செந்தூரில் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்களை கட்டணமின்றி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி இந்து மகா சபா, முருக பக்தர்கள், பொதுமக்கள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்த சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோயில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், வருவாய்த்துறையினர், அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள், முருக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதில் இருந்து காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் பல ஆண்டுகளாக உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்து வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பக்தர்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையாளரான கார்த்திக் உள்ளூர் பக்தர்களே கட்டணமின்றி தரிசனம் செய்வதற்கு எந்த ஒரு அரசு ஆணை இல்லை என பதிலளித்தார். ஆனால் பல ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கபட்ட நிலையில் தற்போது ஏன் அனுமதிக்கப்படவில்லை என கோட்டாட்சியர் குருச்சந்திரன், இணை ஆணையர் கார்த்திக்கிடம் கேட்டபோது பக்தர்களை அனுமதிக்க உள்ளூர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு கொண்டு சென்று அனுமதி பெற்று வரும்படி இணை ஆணையர் கார்த்திக் தெரிவித்தார்.

இதனால் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரனுக்கும், இணை ஆணையர் கார்த்திக்கும் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வெளியே சென்றனர். இந்த சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால், உயர் அலுவலர்களின் அறிவுரையைப் பெற்று டிசம்பர் 21 ஆம் தேதி மீண்டும் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.

Similar News