நினைவுகளில் மட்டுமே நிற்கும் குலசேகரப்பட்டினம் இலகு இரயில்வே
குலசேகரப்பட்டினம் திசையன்விளை இடையே சர்க்கரை ஆலைக்காக மட்டுமே இயக்கப்பட்ட குலசேகரப்பட்டினம் இலகு இரயில்வே;
குலசேகரப்பட்டினம் ரயில் நிலையம்
நெல்லை - தூத்துக்குடி மாவட்டங்களின் நீண்ட நெடிய வரலாறு குற்றாலத்தோடும், கூடங்குளத்தோடும் முடிந்து போவதில்லை. தேரிக்காடுகளிலும் அதனைத் தேட வேண்டியதுள்ளது.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாயும் நெல்லை மண்ணில், வறட்சியின் வரைபடமாகவே திசையன்விளை, குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகள் திகழ்கின்றன. பனை, பனங்கிழங்கு, பதநீர், கருப்பட்டி. ஒரு காலத்தில் இவைதான் இந்தப் பகுதிகளின் ஜீவாதாரம். பதனீரும், நுங்கும் பண்டமாற்று முறைக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் தேரிக்காடுகளை இணைத்து ஒரு ரயில் ஓடியதென்றால் நம்பவா முடிகிறது?
70 ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் வரை ஓடிய தேரிக்காட்டு ரயில், பழைய தலைமுறைக்கு மட்டுமே பரிச்சயம். 1914 முதல் 1940 வரை அந்த ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்கள் கூறுகின்றன.
சென்னையைத் தலைமையிடமாக கொண்ட பாரி அன் கோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் ஒரு சர்க்கரை ஆலையைத் துவங்கியது. 'குலசேகரன்பட்டினம் லைட் ரயில்வே'(கே.எல்.ஆர்) என்ற பெயரில் இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும் ஆலைக்கு வேலையாட்கள் வந்து செல்வதற்கு எனவும் இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதை இந்த நிறுவனத்தின் சொந்த பயன்பாட்டுக்காக நிறுவனத்தின் செலவிலேயே அமைக்கப்பட்டது.
பதநீரும், கருப்பட்டியுமே இந்த ரயிலின் ஆரம்பகால தேடலாக இருந்திருக்கிறது. பொழுது விடிவதற்குள் பதநீரை கொண்டு வந்து பாரி நிறுவனம் வைத்திருக்கும் தொட்டியில அளந்து ஊற்றிவிடுவார்கள். பதநீரை கொண்டு செல்ல திசையன்விளையில் இருந்து குலசேகரப்பட்டினம் வரைக்கும் குழாயே பதித்திருந்தார்கள். குழாயில் பதநீரை ஊற்றினால் போதும், அது ஆலைக்குப் போய் சேர்ந்து விடும்.
குலசேகரப்பட்டினத்தில் இருந்த சிறிய ஆலையில் பதநீர் காய்ச்சப்பட்டு, திரவமும் இல்லாமல், திடமும் இல்லாமல், 'பானி' எனப்படும் கூழ் போன்ற பதநிலையில்தான் ரயில்களில் அவை பெரிய ஆலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை சர்க்கரையாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியானது
இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரப்பட்டினத்திலிருந்து உடன்குடிக்கு தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர்.
அப்போது இருந்த ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்திலின் பேரில் பொது மக்களின் போக்குவரத்துக்காகவும் ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த பாதையில் ரயில்கள் 1914 முதல் 1940 வரை இயக்கப்பட்டதாக ரயில்வே துறை ஆவணங்களில் உள்ளது.
திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் துறைமுகம், குலசேகரப்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை, ஆலந்தலை திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இது தவிர பிரிவு ரயில் பாதையாக குலசேகரப்பட்டினம் சென்ட்ரல் நிலையத்திலிருந்து காட்டான்காடு, வழியாக உடன்குடிக்கும் ரயில்பாதை அமைக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர் காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த வழி தடத்தில் இயங்கிய ரயில்கள் அனைத்தும் நிலக்கரி மூலமாக இயக்கப்பட்டன. திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இரண்டு ரயில்களும் மறுமார்க்கம் திருச்செந்தூரிலிருந்து திசையன்விளைக்கு மூன்று ரயில்களும் இயக்கப்பட்டன. இது தவிர திசையன்விளை வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது.
குலசேகரபட்டினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உடன்குடிக்கு இருமார்க்கங்களிலும் தினசரி நான்கு சேவைகள் ரயில்கள் இயக்கப்பட்டன. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக இருந்தது. திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இந்த ரயிலில் பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும்.
இது போன்ற குறுகிய ரயில்பாதை தற்போது டார்ஜிலிங் பகுதியில் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த காலகட்டங்களில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் வழித் தடத்தில் தென் இந்திய ரயில்வே நிறுவனம் ரயில்களை இயக்கி வந்தது. இந்த வழித் தடம் தான் தற்போது அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் ரயில் நிலையம் தென் இந்திய ரயில்வே நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருந்து வந்தது. பின்னர் தென் இந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டு இந்திய ரயில்வே துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரபட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு வேண்டத்தகாத சம்பவங்கள் காரணமாகவும் குலசேகரபட்டினம் கே.பி.என் தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியது. இதனால் இந்த ரயில்பாதையின் உரிமையாளரான பாரி அன் கோ நிறுவனம் இந்த ரயில் வழி திட்டத்தை படிப்படியாக நிறுத்துவது என முடிவெடுத்தது.
திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய அரசு நிர்வாகம் இந்த ரயில் வழிதடத்தையும் ரயில் சேவையையும் இணைத்து வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்துக்கு வங்கிகளும் கடன் கொடுக்க தயாராக இருந்தன. ஆனால், ஏதோ காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இவ்வாறு தொழிற்சாலை மூடிய காரணத்தாலும் இந்த ரயில்வே திட்டத்தை பொறுப்பேற்று தொடர்ந்து நடத்த யாரும் முன்வராத காரணத்தாலும் இந்த பகுதியில் இயக்கப்பட்ட ரயில் சேவை முற்றிலும் முடங்கிப்போனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் ஓடியதற்கான எந்த ஒரு அறிகுறியும் காணப்படவில்லை. இந்த ரயில்கள் இயக்கப்பட்ட வழி தடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் படிப்படியாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு எந்த சுவடும் இல்லாமல் அனைத்தும் அழிந்துவிட்டது.
தென்னிந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது போல், இந்த குலசேகரபட்டினம் இலகு ரயில்வே நிறுவனமும் அரசுடமையாக்கப்பட்டிருந்தால் இந்த பகுதியிலும் அகல ரயில்பாதையில் ரயில்கள் ஓடிக்கொண்டிருந்திருக்கும். குலசேகரபட்டினம் இலகு ரயில், தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதால் இந்திய ரயில்வேதுறை இந்த வழித்தடத்தை அரசுடையாக்காமல் விட்டு விட்டது.
அரசுடமையாக்கப்பட்டிருந்தால், பொருளாதாரத்தில் பின் தங்கிய, வறட்சி நிறைந்த இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.