திருச்செந்தூரில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டு வரும் பெருந்திட்டப் பணிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையில், உறுதிமொழி குழு உறுப்பினர்கள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். கோயிலில் கட்டப்பட்டு வரும் யாத்திரி நிவாஸ் விடுதி, பெருந்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனல். தொடர்ந்து
கோவில் அன்னதானத்தில் வழங்கப்படும் உணவினை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும், அன்னதானத்தில் வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து பக்தர்களிடம் அவர் கேட்டறிந்தார். தொடர்ந்து பெருந்திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த வேல்முருகன் பணிகளை மிகத்தரமான கட்டவேண்டும் என உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மெகா திட்டப்பணிகள் 2022 முதல் 2025 வரை நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. வரும் 2025-இல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று நாட்டு மக்களுக்கு அர்ப்பனிக்கப்படும். அப்போது இந்திய அளவிலே எல்லா வசதிகள் நிறைந்த கோயிலாக திகழும்.
கோயிலில் உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி எளிதாக தரிசனம் செய்ய பரிந்துரை செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை கொண்டு வராவிட்டாலும் அவர்களை தனியாக தரிசனத்திற்கு அனுமதிக்கபடுவார்கள். மேலும் கோயிலுக்கு புறவழிச்சாலை அமைக்கவும், கோயில் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கவும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் சட்ட்பேரவை உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
ஆய்வின்போது, சட்டப்பேரவை உறுதிமொழி குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், ராமலிங்கம், மோகன், அருள் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் கருணாநிதி மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.