காயல்பட்டினத்தில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையம் திறப்பு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
காயல்பட்டினம் நவீன பனைவெல்ல உற்பத்தி மையம் மூலம் பனைத்தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், காயல்பட்டினத்தில் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியம் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட உள்ள நவீன பனைவெல்ல உற்பத்தி மையத்தின் காயல்பட்டினம் அலகு திறப்பு விழா நடைபெற்றது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நவீன பனைவெல்ல உற்பத்தி மையத்தை, கனிமொழி எம்.பி. திறந்து வைத்து பனைவெல்லம் உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களை வழங்கினார்.
தொடர்ந்து, கனிமொழி எம்.பி. பேசியதாவது:
நவீன பனைவெல்ல உற்பத்தி மையம் மூலம் பனைத் தொழிலாளர்கள் தாங்கள் கொண்டு வரும் பதநீரில் இருந்து நவீன முறையில் சுத்தமான தரமான பனைவெல்லம் உற்பத்தி செய்து உரிய விலையினை பெற்று வாழ்வாதாரம் மேம்பட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பனை ஓலை தயாரிப்பு பயிற்சி பெறும் பயனாளிகள் மற்றும் பனைவெல்லம் தயாரிக்க பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை பயன்படுத்தி அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், கதர் கிராமத் தொழில்கள் மதுரை மண்டல துணை இயக்கநர் பாரதி மற்றும் பனைத் தொழிலாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.