திருச்செந்தூர் அருகே மழை வெள்ளத்தில் சிக்கி சகோதரர்கள் உயிரிழப்பு
Heavy Rain 2 Brothers Dead திருச்செந்தூர் அருகே கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் முழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Heavy Rain 2 Brothers Dead
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாமிரபணி ஆற்றின் கரையோரமான தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள சொக்கபழங்கரை கிராமத்தில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் மேலாத்தூர் சுப்பிரமணியபுரம் வெள்ளநீரில் தத்தளித்தது. வீடுகளில் கழுத்தளவு தண்ணீர் நின்றது.
இந்த வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலாத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் விவசாயி அருள்ராஜ் (35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கனமழை பெய்து கொண்டிருந்த 18 ஆம் தேதி இரவு வீட்டின் வெளிச்சுவர் முன்பு கழுத்தளவு தேங்கிய வெள்ளநீரில் கடந்து வீட்டிற்கு அருள்ராஜ் சென்ற போது திடீரென உருவான பள்ளத்தில் சிக்கி வெள்ளநீரில் முழ்கி பலியாகி நீரில் மிதந்துள்ளார்.
இதனை பார்த்த அருள்ராஜின் அண்ணன் சேகர் நீரில் நீச்சலடித்து சென்று உடலை மீட்டுள்ளார். இருப்பினும், மழை வெள்ளத்தில் சிக்கி தனது தம்பி அருள்ராஜ் இறந்த தகவலை காவல்துறை, வருவாய்த்துறை, உறவினர்களிடம் தெரிவிக்க செல்போன் நெட்வொர்க் இல்லாமல் சேகர் தவித்துள்ளார்.
Heavy Rain 2 Brothers Dead
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மற்றொரு சகோதரர் சேகர்.
இதனையடுத்து அடுத்த நாள் காலையில் தம்பி இறந்த தகவலை தெரிவிக்க சேகர் தெருவின் முகப்பு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது சாலையோரத்தில் வெள்ளத்தில் உருவான பள்ளத்தில் சிக்கி வெள்ளநீரில் முழ்கி உயிருக்கு போராடிய சேகரை அங்கு கூடியிருந்த இளைஞர்கள் சிலர் மீட்டு உள்ளனர்.
இருப்பினும், வெள்ளத்தில் சிக்கிய சேகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்ததால், இளைஞர்கள் சேகருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சேகரின் மனைவி கீதா கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவர்களுக்கு ஷாலினி(15) என்ற மகள் உள்ளார். தற்போது ஷாலினி தாய், தந்தையின்றி தவித்து வருகிறார்.
ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த அருள்ராஜ், சேகர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.