திருச்செந்தூரில் வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இலவச இணைப்பு
திருச்செந்தூர் பாதாள வீடுகளுக்கு சாக்கடை திட்டத்தில் இலவச இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.;
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
மேலும், திருச்செந்தூர் நகராட்சி காய்கறி சந்தையில் ரூ. 3.96 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி கடைகளையும், ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் திருச்செந்தூர் நகராட்சி அலுவலகம் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து ஆவுடையார்குளம் மறுகால் ஓடையினை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திருச்செந்தூரை சுத்தமான நகரமாக மாற்ற வேண்டும் என்று முதல்வரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் அறிவுறுத்தியதன்பேரில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற வீட்டுக்கு ரூ. 5000 செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றி சுமார் 4000 வீடுகளுக்கு இலவசமாக இணைப்பு வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பாதாள சாக்கடை திட்டத்தில் உணவகங்கள், வணிக வளாகங்களையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வீடுகளில் இருப்பவர்கள் எவ்வித அச்சமின்றி பாதாள சாக்கடை இணைப்பு பெறுவதற்கு முன்வர வேண்டும். இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் ஆலந்தலை அருகே 85 ஏக்கர் பரப்பில் உள்ள இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நகராட்சி மூலம் ரூ.90 இலட்சம் மதிப்பில் விவசாய பெருமக்கள் பயன்பெறும் வகையில் புற்கள் வளர்ப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காய்கறி சந்தையில் 148 கடைகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்துள்ளது. அதேபோல் மீன், இறைச்சி சந்தைகளுக்கும் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்து தற்போது கட்டப்பட்டு வருகிறது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் ரமேஷ், காவல் துணைக் கண்காணிப்பாளர் வசந்தராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் வட்டாட்சியர் வாமணன், நகராட்சி ஆணையர் வேலவன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ராமசாமி, லதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.