விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலத்தில் விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று விஜர்சனம் செய்வது தொடர்பாகவும் இந்து அமைப்புகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் கொண்டு காவல் நிலைய அளவிலும், உட்கோட்ட அளவிலும் 12.09.2023 ஆம் தேதியும், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 13.09.2023 ஆம் தேதியும் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டங்களில், சிலைகளை பிரதிஷ்டை செய்வது தொடர்பாகவும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும், ஒவ்வொரு வகைகள் குறித்தும் தனித்தனியாக அறிவுரைகள் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற அனைவராலும் விதிமுறைகளை ஏற்றுக்கொள்வதாக எழுத்து மூலமான உத்தரவாதம் பெறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நேற்று ஊர்வலமாக கொண்டுச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்த விஜர்சன ஊர்வலத்தில் பங்கேற்ற 11 வாகனங்கள் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய ஸ்பீக்கர்களை வாகனங்களில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூராக ஒலி எழுப்பிக் கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டு விதிமுறைகளை மீறியதால் அந்த வாகனங்கள் மீது காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்த வாகனங்களுக்கு 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.