திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2023-08-30 16:22 GMT

திருச்செந்தூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில், திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருக்கோயில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழா செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வருகின்ற 10 ஆம் தேதி சிவப்பு சாத்தியும், 11 ஆம் தேதி பச்சை சாத்தியும், 13 ஆம் தேதி தேர் திருவிழாவும் நடைபெற இருக்கிறது.

திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தி இருக்கிறோம். தீயணைப்பு துறையினர் கடலில் குளிப்பவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள். ஆட்டோ கட்டணம் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் கட்டுப்படுத்தப்படும்.

முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட பெருந்திட்ட வளாகப்பணிகள் எச்.சி.எல். நிறுவனம் ரூ. 200 கோடி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ரூ. 100 கோடி என மொத்தம் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் முடியும்போது திருப்பதி கோவிலுக்கு இணையான வசதிகள் பக்தர்களுக்கு கிடைக்கும்.

மேலும், திருச்செந்தூர் நகருக்கு ஸ்ரீவைகுண்டம், குரங்கணி மற்றும் காணம் ஆகிய கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக வரும் தண்ணீரை சீராக வழங்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு தண்ணீர் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

தாமிரபரணி ஆற்றில் இருந்து முதலாவதாக பொதுமக்களுக்கும், இரண்டாவதாக விவசாயிகளுக்கும், மூன்றாவதாக சில நிறுவனங்களுக்கும் தண்ணீர் வழங்கி வருகிறோம். தற்போது தாமிரபரணி ஆற்றில் 325 கன அடி தண்ணீர் வருகிறது. உறைகிணறுகளுக்கு தண்ணீர் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயில் முன்பு கழிவுநீர் தேங்குவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எல்லப்பநாயக்கன்குளத்தில் இருந்து அருகில் உள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்புக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்தக் குளத்தினை தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அந்தக் குளத்தில் இருந்து தனியார் யாராவது தண்ணீர் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணித் திருவிழாவில் இந்த ஆண்டு நெரிசல் இல்லாத அளவுக்கு காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும், காவல்துறையும் இணைந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

திருக்கோயில் பகுதியில் திருநங்கைகள் பொதுமக்களுக்கு தொந்தரவு தராத வகையில் முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை வைத்து உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆவணித் திருவிழாவில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் நகர மன்றத் தலைவர் சிவஆனந்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன், திருச்செந்தூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News