திருச்செந்தூரில் பனை வளம் காப்போம் விழிப்புணர்வு கருத்தரங்கம்
திருச்செந்தூர் கல்லூரியில் பனை வளம் காப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;
தமிழர்களின் தேசிய மரமான பனைமரம் தமிழகத்தில் மட்டுமல்லாது தமிழர்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலும் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளது. தற்போதைய வருங்கால தலைமுறையினருக்கு பனை மரத்தின் பயன்கள் தெரியாமலும், பனை உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் அறியாமலும் உள்ளனர்.
இதனால் தற்போது பனை மரங்களை செங்கல் சூலைகளுக்கும், விறகிற்க்காகவும் தொடர்ந்து அழித்து வருகிறார்கள். இதனால் கணிசமான கோடிக்கணக்கான பனை மரங்கள் அழிந்து விட்டன. பனை மரத்தின் அழிவை தடுக்கவும், பனைப் பொருட்களின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கல்லூரி அரங்கத்தில் வைத்து "பனை வளம் காப்போம்" விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கல்லூரி 44 ஆவது அணி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சத்யலட்சுமி அனைவரையும் வரவேற்றார். ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான கென்னடி கலந்து கொண்டு பேசியதாவது:
பனைமரம் தமிழர்களின் அடையாளம் பனையின் நுனி முதல் வேர் வரை பயன்தருகிறது. எனவே, இதனை கற்பக தரு என அழைக்கின்றனர். பனை மரங்களை கடற்கரை ஓரங்களில் வளர்வதினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, புயல், சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கிறது. நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது.
கடல் நீரை விவசாய நிலத்துக்குள் புகாமல் தடுக்கிறது. ஒரு பனைமரம் சுமார் 25 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமிக்க கூடியது. நீர் பிடிப்பு பகுதியிலான ஆற்றங்கரை குளத்தங்கரை வாய்க்கால் பகுதிகளில் பனை மரங்களை வளர்ப்பதினால் மண் அரிப்பை தடுத்து கரையை வலுப்படுத்துகிறது.
பண்டைய காலங்களில் வீட்டின் கூரை மேய்வதற்கு பனையின் ஓலைகளே பயன்பட்டன. இது வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக்காலங்களில் சூட்டையும் வழங்கி மனிதர்களை காப்பாற்றின. தற்போது பனை ஓலையை கொண்டு பாய் பின்னுதல் மற்றும் அழகு சாதன பொருட்களை உற்பத்தி செய்து வடிவமைத்து விற்பனை செய்யப்படுகிறது. இது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நம் நாட்டுக்கு அந்நிய செலவாணி கிடைக்கிறது.
மேலும் பதநீர், கருப்பட்டி, கருவெல்லம், கல்கண்டு, பனசீனி, நுங்கு, பனபழம், பனங்கிழங்கு,போன்ற உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன. இது போன்ற அளவிட முடியாத பயன்களையும், வளங்களையும் கொண்டிருப்பதால்தான் பனை மரங்கள் "பூலோக கற்பக விருட்சம்" என்று சிறப்பித்து கூறப்படுகின்றன. இந்த பனைப் பொருட்களை உண்டு வாழ்ந்ததினால் நாம் முன்னோர்கள் அதிக ஆயுளுடன், ஆரோக்கியமாக, வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
இத்தகைய சிறப்புகளையும், ஒப்பற்ற நன்மைகளையும் தரக்கூடிய இப்பனை மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையே. மேலும், பனை மரத்தின் பயன்பாடுகள் அளப்பரியவை. பனை மரங்கள் நம் மண்ணிற்குரிய சிறப்பு மிக்கவை. பனை வளத்தை அழிக்காமல் பாதுகாத்து, வளர்த்து, பயனடைவோம் என கென்னடி பேசினார்.
இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பனைமர விதைகள் விதைக்கும் பணியை கென்னடி துவக்கி வைத்தார் .இதனைத் தொடர்ந்து மாணவர்கள் பனைமரம் விதைகளை விதைத்தனர். இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி, திட்ட அலுவலர் மரியராஜ்,ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (43 வது அணி) அலுவலர் அபுல்கலாம் ஆசாத் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியின்போது, ஒரு கோடி பனை மர விதைகளை விதைப்பதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக செயல்பட்டு வரும் சேவையைப் பாராட்டி மதர் சமூக சேவை நிறுவன இயக்குநர் கென்னடிக்கு, ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் பரிசு வழங்கி பாராட்டினார்.