உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து
உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படம் பற்றி அர்ஜூன் சம்பத் கருத்து தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி மாயாண்டி சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோயிலை கைப்பற்றி தீட்சிதர்களை விரட்டியடிக்கலாம் என்ற உள்நோக்கத்துடன் தமிழக அரசு செயல்படுகிறது. தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் வன்மையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சாசனப்படி தன் கடமையை செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக் குற்றவாளியாக கைதாகி சிறையில் இருக்கும் அவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். கடந்த காலத்தில் செந்தில் பாலாஜி மீதும், விஜயபாஸ்கர் மீதும் ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தது ஸ்டாலின் தான்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தாமாகவே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விலக்கி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அணுகுமுறை சரியானதல்ல. ஆளுநர் விவகாரத்தை முதல்வர் திசை திருப்ப பார்க்கிறார்.
மக்கள் நலனுக்கு விரோதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். நிஜத்தில் மாமன்னனை உருவாக்கியது ஜெயலலிதா தான். மாமன்னன் கதை முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு நடந்த கதைதான். தி.மு.க.வில் நடப்பதை உதயநிதி ஸ்டாலினை நடிக்கவைத்து வெளிச்சம் போட்டுள்ளார் மாரி செல்வராஜ்.
பட்டியலினத்தை சேர்ந்தவர் சபாநாயகராக இருக்கக்கூடாது என தனபாலை நாற்காலியில் இருந்து இழுத்துபோட்டவர்கள் தி.மு.க.வினர்கள். மாமன்னன் திரைப்படம் மூலம் தன் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.