காயல்பட்டினத்தில் நடந்த வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்குதல் விழா
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் 33 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும். ஆனால் 23 சதவீதம் மட்டுமே காடுகள் உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் மிகக் குறைவாக 4.5 சதவீதம் மட்டுமே உள்ளது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு நோய்களும் பரவி வருகிறது.
அதனை தடுக்க வேண்டும் என்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் மரங்களை நட வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காயல் இயற்கை வளம் அமைப்பு மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் ஆகியவை சார்பில் காயல்பட்டினத்தில் பள்ளி, கல்லூரி, பள்ளிவாசல், மசூதி, சாலை ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அனைத்து வீட்டு வாசலும் மரக்கன்றுகள் இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
காயல்பட்டினம் எல்.கே மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்தவர்களை எல் கே மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செய்யது முகைதீன் வரவேற்றார். திருச்செந்தூர் வனசரக வனவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
காயல் இயற்கை வளம் பொறுப்பாளர்கள் இப்ராஹிம், ராவண்ணா அபுல் ஹாசன், அப்துல் காதர்,லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் பானுமதி மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் காயல் பாலா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
சிறப்பு விருந்தினராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான கென்னடி கலந்து கொண்டு வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். முதல் மரக்கன்றை எல் கே மேல்நிலைப்பள்ளி தலைமை தலைமை ஆசிரியர் சையது முகைதீன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூர் வனக்காப்பாளர் முகமது பைசல் ராஜா, வன காவலர் ராபின்ஸ்டன், காயல் இயற்கை வள அமைப்பு பொருளாளர் கிருஷ்ணன் என்கிற கண்ணன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். அதனைத் தொடர்ந்து காயல் இயற்கை வளம் அமைப்பினருக்கும், பொதுமக்களுக்கும் வீட்டுக்கொரு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை பள்ளி முதுநிலை அரபி ஆசிரியர் ஜுபைர் அலி தொகுத்து வழங்கினார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முகமது சித்திக் நன்றி கூறினார். மேலும் பள்ளி வளாகத்திலும், பள்ளிவாசல் பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பல கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காயல் இயற்கை வளம் அமைப்பின் செயலாளர் ஜாஹிர், துணைச் பொருளாளர் கலீல் ரஷ்மான் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.