தொடர் கனமழையால் குரும்பூர் பகுதியில் 8 வீடுகள் சேதம்: பொதுமக்கள் முகாமில் தஞ்சம்
தொடர் கனமழையால் குரும்பூர் பகுதியில் 8 வீடுகள் சேதம். குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் முகாமில் தஞ்சம்.;
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா குரும்பூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் கடம்பாகுளம் அருகே உள்ள கீழக்கல்லாம்பாறை பகுதியில் 2 இடத்திலும், அங்கமங்கலம் ராமலெட்சுமி கோயில் அருகே ஒரு இடத்திலும், ஏரல் ரோட்டில் 2 இடத்திலும், மயிலோடையில் 2 இடத்திலும் மறுகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் கீழக்கல்லாம்பாறை, அங்கமங்கலம் சுப்பிரமணியபுரம், குரும்பூர் அருந்ததியர் காலனி போன்ற பகுதிகளில் குடியிருப்பை வெள்ளநீர் சூழ்ந்தது. பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் ஏற்பட்டது. மேலும் கீழகல்லாம்பாறையில் 3 வீடுகள் முழுமையாகவும், 3 வீடுகள் பகுதியளவும், புறையூர் பஞ்.,சில் ஒரு வீடும், அங்கமங்கலம் பஞ்.,சில் ஒரு வீடும் மழைக்கு இடிந்து சேதமடைந்தன.
கரை உடைப்பால் புறையூர் ரோட்டிலிருந்து கீழக்கல்லாம்பாறைக்கு செல்லும் ரோடு முற்றிலும் துண்டிக்கப்பட்டு மறுபுறம் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ந்தது. இதனால் பொதுமக்கள் ஊருக்கு வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து துண்டிக்கப்பட்ட சாலையில் மணல் மற்றும் பெரிய கற்களை கொட்டி தண்ணீர் செல்வது தடுக்கப்பட்டது. இதேபோல் அங்கமங்கலம் பஞ்., அருந்ததியர் காலனியில் தேங்கியிருந்த வெள்ளநீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குரும்பூர் புனித லூசியா உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆழ்வார்திருநகரி யூனியன் சார்பில் பிடிஓ தங்கவேல் ஏற்பாட்டில் தென்திருப்பேரை ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் மருத்துவ உதவி மற்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அங்கமங்கலம் பஞ்., சார்பில் முகாமில் உள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.