தாயை பராமரிக்காத மகனுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை: திருச்செந்தூர் ஆர்டிஓ அதிரடி
திருச்செந்தூர் அருகே பெற்றத் தாயை பராமரிக்க தவறிய மகனுக்கு, மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.;
திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். (கோப்பு படம்).
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம் வாழவல்லான் பகுதியைச் சேர்ந்தவர் மாலையம்மாள். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் முத்துக்குமார் (38) மாலையம்மாளை, சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாலையம்மாள், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் 9-12-2021 அன்று கோட்டாட்சியராக இருந்த தனப்பிரியா மூதாட்டி மாலையம்மாளுக்கு அவரது மகன் முத்துக்குமார் மாதம் ரூ. 5000 வழங்கிட வேண்டும் உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அந்த உத்தரவை கடைபிடிக்காமல் முத்துக்குமார் தாய் மாலையம்மாளுக்கு மாதம் தோறும் கொடுக்க வேண்டிய ரூ. 5000 கொடுக்காமல் இருந்து உள்ளார்.
இதனால் மாலையம்மாள் 31-7.23 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவன்படி, வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை பின்பற்ற தவறிய முத்துக்குமாருக்கு மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பிரிவின் 24-இன் கீழ் மூன்று மாதம் சிறைத் தண்டனை விதித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் இன்று உத்தரவு பிறப்பித்தார். இதையெடுத்து, முத்துக்குமாரை ஏரல் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த விவகாரம் குறித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பெற்ற தாயை பராமரிக்க தவறிய ஏரல் வட்டம், வாழவல்லான் பகுதியைச் சேர்ந்த முத்துகுமார் என்பவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இது மாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என, அவர் தெரிவித்தார்.