திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நாழிக்கிணற்றில் பத்து மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந்தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் கூட்டமாக நீராடுவதை தவிர்க்கும் வகையில், புண்ணிய தீர்த்தமான கோவில் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கோவில் நாழிக்கிணற்றிலும் பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடினர். 10 மாதங்களுக்கு பிறகு நாழிக்கிணற்றில் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டதால், ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சியுடன் புனித நீராடி வருகின்றனர்.