தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை பெய்ததால், பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனால் நெல்லை-திருச்செந்தூர் சாலையில் கடந்த 3 நாட்களாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அனைத்து பேருந்துகளும் வசவப்பபுரம், வல்லநாடு வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை அளவு குறைந்ததால், அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை-திருச்செந்தூர் சாலையில் சென்ற வெள்ளநீர் வடிந்தது. எனவே நெல்லை-திருச்செந்தூர் சாலையில் மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.