திருச்செந்தூரில் சமாதானக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

திருச்செந்தூரில் சிறப்பு கிராம சபை நடத்தக்கோரி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Update: 2023-08-29 15:57 GMT

சாமாதானக் கூட்டத்தை புறக்கணித்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட கிராம மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள நா.முத்தையாபும் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெற்ற மேலத்திருச்செந்தூர் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றிடாமல் பாதியில் முடிக்கப்பட்டது.

12 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற்ற கிராமசபைக் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடத்தக் கோரியும் காலி குடங்களுடன் கடந்த 24 ஆம் தேதி திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, கிராம மக்களிடம் சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கோட்டாட்சியர் குருசந்திரன் தலைமையில் போக்குவரத்துத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்ற சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் குடி தண்ணீர் பிரச்னை, சாலை வசதி மற்றும் மேலத்திருச்செந்தூர் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடத்தை இடமாற்றம் செய்யவும் கிராம மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். மேலும், எல்லப்பநாயக்கன் குளத்தில் இருந்து நிலத்தடி நீரை உறிஞ்சி தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதை தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உடன்பாடு ஏதும் ஏற்படாததால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். மேலும் மேலத்திருச்செந்தூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கிராம மக்கள் அறிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News