பைக்கில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு, 3 பவுன் நகை பறித்த வழக்கில் இளைஞர் கைது

கோவில்பட்டியில் பைக்கில் சென்றவரிடம் லிப்ட் கேட்டு, தங்க நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-10 14:32 GMT

கைது செய்யப்பட்ட மகாராஜா.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி படர்ந்தபுளி, தோணுகால் பகுதியை சேர்ந்தவர் அய்யனார் (28). இவர், கடந்த 10.06.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவர் அய்யனாரிடம் லிப்ட் கேட்டுள்ளார்.

இதையெடுத்து, அய்யனாரும் அந்த சிறுவனை ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி மூப்பன்பட்டி பகுதியில் உள்ள பாலம் அருகில் இறக்கி விட்டுள்ளார். அப்போது, அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அந்த சிறுவனுடன் சேர்ந்து கொண்டு அய்யனாரிடம் தகராறு செய்து அவரிடம் இருந்த 3 பவுன் தங்கசெயின் மற்றும் பணத்தை பறித்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து அய்யனார் கடந்த 13.06.2023 அன்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் கோவில்பட்டி கிழக்கு குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் காந்தி விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், தூத்துக்குடி தபால் தந்தி காலனியைச் சேர்ந்த மகாராஜா (24) என்பவர் அய்யனாரிடம் தங்க நகை பறிப்பில் ஈடுபட்டதும், தற்போது மகாராஜா விருதுநகர் மாவட்டம் எம். புதுப்பட்டி காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தனிப்படை போலீசார் கடந்த 08.09.2023 அன்று விருதுநகர் மாவட்ட சிறைச்சாலைக்கு சென்று சம்பிரதாய கைது செய்து, கோவில்பட்டி முதலாவது குற்றவியல் நடுவர் முன்பு ஆஜர்படுத்தினற். நீதிமன்ற நடுவர் உத்தரவுப்படி காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைக்குப்பிறகு மகாராஜாவிடம் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள 3 பவுன் தங்கசெயின் மற்றும் ரொக்கபணம் 10,000 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு மீண்டும் மகாராஜாவை நேற்று கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News