கோவில்பட்டி பள்ளியில் உலக ஓசோன் தின கண்காட்சி: மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவில்பட்டி பள்ளியில் நடைபெற்ற ஓசோன் தின கண்காட்சியில், பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பாட்டிலில் விதை ஊன்றி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.;

Update: 2023-09-17 06:51 GMT

கோவில்பட்டி பள்ளியில் நடைபெற்ற ஓசோன் தின கண்காட்சியில் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பாட்டிலில் விதை ஊன்றி பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

நாடு முழுவதும் செப்டம்பர் 16 ஆம் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், ஓசோன் படலம் பாதுகாப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உலக ஓசோன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவில்பட்டி ஐ.சி.எம் நடுநிலைப் பள்ளி தேசிய பசுமைபடை சார்பில் உலக ஓசோன் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பயன்படுத்த முடியாத தண்ணீர் பாட்டிலில் மணல் நிரப்பி வெண்டை விதைகளை ஊன்றினர். மேலும், ஓசோன் விழிப்புணர்வு குறித்த படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.

மாணவ, மாணவிகள் பலர் சுற்றுச்சூழல் குறித்த ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு தனது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு ஐ.சி.எம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.

கோவில்பட்டி பசுமை இயக்க தலைவர் ஜெகஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக ஓசோன் தின விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை அவர் வழங்கி பேசினார்.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, ஆசிரியர்கள் அபிலாதிரேஷ், செல்லம்மாள், சுப்புலட்சுமி உள்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை பத்மாவதி நன்றி கூறினார்.

Similar News