கோவில்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.
தாய்ப்பாலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் மையக் கருத்து தாய்ப்பால் ஊட்டுதலை செயல்படுத்துதல்,பணிபுரியும் பெற்றோர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வன் முன்னிலை வகித்தார். ரோட்டரிசங்க செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், கோவில்பட்டி நகர்ப்புற அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
நாடு முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும்.
6 ஆம் மாதம் முதல் 2 வருடம் வரை இணை உணவுடன் தாய்ப்பால் புகட்ட வேண்டும். தாய்ப்பால் சுரப்பதற்கு புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் புகட்டுவதால் கொழு, கொழு என ஆரோக்கியமான குழந்தையாக வளரும். மூளை வளர்ச்சி மற்றும் புத்திசாலியான குழந்தையாகவும் வளரும். தாய் சேய் உறவு வலிமையுடையதாகவும் இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின்போது, கர்ப்பிணி தாய்மார்கள் அனைவரும் தாய்ப்பாலின் அவசியம் கருதி குழந்தைக்கு முதல் 6 மாதம் வரைதாய்ப்பால் மட்டுமே புகட்டுவேன் என்றும், 6 ஆவது மாதம் முதல் 2 வருடம் வரை இணை உணவுடன் தாய்ப்பாலையும் புகட்டுவேன் எனவும் தாய் சேய் உறவு வலிமை அடைய தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் பேரிச்சம்பழம், கருப்பட்டி, கடலை மிட்டாய் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பாபு, நாராயணசாமி, வீராச்சாமி, முத்து முருகன், இளங்கோ, மாரியப்பன், பூல் பாண்டி, செவிலியர்கள் தனலட்சுமி, அனிதா, லேப் டெக்னிஷியன் மகேஸ்வரி உள்பட செவிலியர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மருந்தாளுனர் மகராசி நன்றி கூறினார்.