கோவில்பட்டியில் மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத் தொகை: பெண்கள் மகிழ்ச்சி
கோவில்பட்டியில், பெண்களின் வீடுகளுக்கே சென்று மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;
பெண்களின் வீட்டுக்குச் சென்று மகளிர் உரிமைத் தொகையான ரூ.1000 விநியோகம் செய்த தபால்துறையினர்.
கோவில்பட்டியில், பெண்களின் வீடுகளுக்கே சென்று மணியார்டர் மூலம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆம் தேதி இந்தத் திட்டம் தொடங்கிய நிலையில், விண்ணப்பம் செய்து பணம் கிடைக்காதவர்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தற்போது சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்களும் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் பல பெண்களுக்கு தபால்துறை மூலம் மணியார்டர் மூலமாக மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000-ம் கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் பலர் தங்களது வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கடந்த மூன்று நாள்களாக தகுதி இருந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்று மிகுந்த மன வேதனையில் இருந்ததாகவும், ஆனால் இன்றைக்கு தபால் துறை மூலமாக ரூ. 1000 தங்களுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மணியார்டர் மூலமாக வந்த பெண்களின் ஆதார் அட்டை நகலை பெற்றுக் கொண்டு தபால்துறையினர் ரூ. 1000 வழங்கி வருகின்றனர். தபால்துறையின் இந்த ஏற்பாட்டின் மூலம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மணியார்டர் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.