தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. வழங்கிய நலத்திட்ட உதவிகள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி எம்.பி. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட கிழவிப்பட்டி, கரிசல்குளம் மற்றும் துறையூர் ஆகிய கிராமங்களில் இன்று நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மக்கள் குறை கேட்டல் நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டும் கனிமொழி எம்.பி. பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து மக்களுக்கு அவர்களுடைய தேவைகளை எல்லாம் கிராமப் பகுதியில் இருக்கின்ற மக்களையும் விட்டுவிடாமல் வளர்ச்சி திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற பணித்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிவர்த்தி செய்து தருவதற்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உங்களின் கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிருக்கு மாதம் ரூ. 1000 வழங்க உறுதி அளித்துள்ளார். யாருக்கு தகுதி இருக்கிறது, யாருக்கு ரூ.1000 தேவை இருக்கிறது, யாருக்கு கொடுத்தால் நியாயமாக இருக்கும் என்று அரசு கணக்கெடுப்பு பணி மேற்கொண்டது. தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்துவிட்டது.
வருகின்ற செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைக்க உள்ளார். கிராமப் பகுதிகளில் இருக்கின்ற எல்லா மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்துதர முதல்வர் எங்களுக்கு கட்டளையிட்டு இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முத்தான திட்டங்களை அறிந்துகொண்டு மக்கள் பயன்பெற வேண்டும். வயதானவர்கள், விவசாயிகள் என எல்லோருக்கும் திட்டங்களை தந்துகொண்டிருக்கின்றது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தொடர்ந்து, கிழவிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், வருவாய்த்துறை மூலம் 14 பயனாளிகளுக்கு ரூ.13160 மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் கடனுதவிக்கான காசோலைகளையும், மாற்றுத் திறனாளிக்கு ரூ. 50000 கடனுதவிக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 15700 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் என கிழவிப்பட்டி, கரிசல்குளம் மற்றும் துறையூர் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 110 பயனாளிகளுக்கு 60 லட்சத்து 91 ஆயிரத்து 323 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்றத் தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.