அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.;

Update: 2023-10-08 07:01 GMT

கோவில்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனியார் திருமண மஹாலில் வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி ஓய்வு பெற்றோருக்கான பாராட்டு விழா, நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா, புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்ற விழா உள்ளிட்ட முப்பெரும் விழா வட்டாரத் தலைவர் தங்கபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் மயில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின்மாநில பொதுச் செயலாளர் மயில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் ஆசிரியர் போராட்டம் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 8 தினங்களாக 3 ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு விலக்கிக் கொண்டனர். போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டாலும் ஆசிரியர்களின் பெரும்பாலான கோரிக்கை தமிழக அரசால் இன்று வரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த 99 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என்று கூறி வருகிறார்கள். ஆனால், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றம். தேர்தலில் அளித்த தன் பங்கேற்பு ஒயுவூதித்தை திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை கொண்டு வருவோம் என்று கூறிய வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடை களைவோம் என எழுத்து மூலமாக தெரிவித்தார்கள். அந்த வாக்குறுதி பற்றி கூட அறிவிப்பு இல்லை. தேர்தலில் அளித்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாடு ஆசிரியர்களின் வருத்தமாகும் ஆதங்கமாக இருக்கிறது

மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் பயன் தராது. எனவே, எண்ணும் எழுத்தும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. அக்டோபர் 13 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் 11 ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.

Tags:    

Similar News