கி.ராஜநாரயணனுக்கு அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு :- ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு
கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாரயணனுக்கு அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு :- ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு
இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் கி.ரா. படித்த பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் கி.ரா. படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பித்தல் மற்றும் அரங்கம் அமைக்கும் இடம் தேர்வு செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மறைந்த தமிழ் எழுத்தாளர் கி.ரா. அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை மற்றும் இடைசெவல் கிராமத்தில்; அவர் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை பழமை மாறாமல் புதுப்பிக்கவும், அவரது நினைவினை போற்றும் வகையிலும், அவருடைய படைப்பாளுமையை வெளிப்படுத்தும் வகையிலும், அவரது புகைப்படங்கள், படைப்புகள் ஆகியவற்றை மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ளும் வகையில் அரங்கம் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் ஆகியோர் கடந்த வாரம் கோவில்பட்டியில் சிலை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்துள்ளனர். இடைசெவல் கிராமத்தில் மறைந்த தமிழ் எழுத்தாளர் கி.ரா. படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் மற்றும் அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கும் இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அரங்கம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரங்கம் மற்றும் சிலை அமைக்கவும், அவர் படித்த பள்ளியை பழமை மாறாமால் புதுப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
கொரோனா பரவலை கட்டுபடுத்துவதற்காக மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சியிலும் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள் மட்டுமல்லமால் ஊராட்சி, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்துறை ஆகிய 3 துறைகளும் இணைந்து, குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுக்கள் ஒவ்வொரு நாளும் வீடு, வீடாக சென்று கொரோனா பரவலை கட்டுபடுத்து பணிகளையும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்து வசதிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்து வருவதாகவும்,தனியார் மருந்தகங்களில் பாராசிட்டமால் விற்பனை குறித்து கண்காணிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை 6 ஆயிரம் தடுப்பு ஊசி வரவுள்ளதாக கூறியுள்ளனர். ஏற்கனவே 2 முறை அனைத்து ஊராட்சிகளையிலும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் 36 குழுக்கள் வைத்து கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதற்கு நல்ல ஒரு முன்னேற்றம் கிடைத்துள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பு ஊசி போட்டது 8 சதவீதம் என்பதனை 14 சதவீதமாக உயர்த்தியுள்ளோம், சுகாதரத்துறை பணியாளர்கள் 90 சதவீதம், முன்களபணியாளர்கள், காவல்துறை, வருவாய்துறை என 85 சதவீதம் பேர் தடுப்பு ஊசி போட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி வந்த பின்னர் சிறப்பு முகாம்கள் மூலமாக தடுப்பு ஊசி போடப்படும், தடுப்பு ஊசி அனைவரும் போட வலியுறுத்தி சின்ன, சின்ன வீடியோக்களும் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லட்சுமணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் அமுதா, பள்ளி தலைமை ஆசிரியர் மாரியம்மாள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.