கழுகுமலையில் புகையிலை பொருள்கள் பறிமுதல்-எஸ்பி நேரில் ஆய்வு.

கழுகுமலையில் மினி லாரியில் கடத்தப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களையும் மினிலாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.;

Update: 2021-06-04 17:09 GMT

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உணவு பொருள் என்ற பெயரில் மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ. 9 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்து மேலும் ஒருவரை போலிசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தெற்கு கழுகுமலையில் சந்தேகத்திற்கு இடமாக மினிலாரி ஒன்று நின்று கொண்டு இருப்பதை பார்த்த போலீசார் மினிலாரிடிரைவர், கீளினர் இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் சேலம் மாவட்டம் மாமரத்தூரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் சீனிவாசன்(36), கீளினர் தர்மபுரி மாவட்டம் மூளக்காடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் மாது (37) என்பது தெரியவந்தது.

மினிலாரியில் சிப்ஸ் ஏற்றி வந்து இருப்பதாக முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் மினி லாரியை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதில் தடைசெய்யப்பட்ட புகையிலை 30 மூட்டைகளும், பான்மசாலா - 6 மூட்டைகளும் மொத்தம் 36 மூட்டை (சுமார்-1242 கிலோ கிராம்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 9 லட்சத்து 30 ஆயிரம் என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து 36 மூட்டை தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து இருவரிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம், பெங்களுர் அருகேயுள்ள பொம்மசந்திரா என்ற இடத்தில் இருந்து கழுகுமலை ஆறுமுகம் நகரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சந்திரசேகர் என்பர் குடோனுக்கு புகையிலை மற்றும் பான்மசாலாவை கொண்டு வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசன், மாது இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குடோன் உரிமையாளர் சந்திரசேகரை தேடி வருகின்றனர். 9 லட்சம் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட புகையிலையை பறிமுதல் செய்து குற்றவாளியை கைது செய்த காவலர்களுக்கு எஸ்பி ஜெயக்குமார் நேரில் வந்து பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

தொடர்ந்து எஸ்பி ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்:- தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு இதுவரை தடைசெய்யபட்ட புகையிலை பொருள்கள் தொடர்பாக 684 வழக்குகள் பதிவாகி 687 குற்றவாளிகள் கைது செய்ய்பபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 3800 கிலோ தடை செய்யபட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போன்று போதை தரக்கூடிய கஞ்சா தொடர்பாக 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 305 பேர் கைது செய்யப்பட்டு 47கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 75 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் புகையிலை மற்றும் கஞ்சா கடத்திய 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளைஞர்களை குறி வைத்து கடத்தப்படும் புகையிலை மற்றும் கஞ்சா ஆகியவற்றை யார் வைத்து இருந்தாலும், கடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். பெங்களுரில் இருந்து கழுகுமலைக்கு வரும் வழியில் வேறு எங்கும் புகையிலை பொருள்கள் விற்பனைக்கு கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

பேட்டியின் போது கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் சோபா ஜென்சி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News