கோவில்பட்டி பள்ளியில் மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயன்பாடு பயிற்சி
கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது.;
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் அறிவியல் மற்றும் விண்வெளி கருத்துக்களை கொண்டு செல்வதற்கு நாடு முழுவதும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை உலக விண்வெளி வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
முதன் முதலில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக் ஏவப்பட்ட தினம் அக்டோபர் 4 ஆம் தேதி ஆகும். இதேபோல, விண்வெளி ஆய்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட தினம் அக்டோபர் 10 ஆம் தேதி ஆகும். இதை நினைவு கூறும் வகையில், விண்வெளி வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் சார்பில் உலக விண்வெளி வார விழா கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப் மூலம் பார்வையிடுவது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பிரபு தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் ஒருங்கிணைப்பாளர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். பள்ளி அறிவியல் ஆசிரியை இந்துமதி அனைவரையும் வரவேற்றார்.
தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் தலைவர் எழிலன், தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு உலக விண்வெளி வார விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி டெலஸ்கோப் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் கீதாராணி, ரேகா, தமிழ்ச்செல்வி, சங்கீதா, சீதா, சுஜா, ராமமூர்த்தி, உமா சங்கரி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். அறிவியல் ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்