கோவில்பட்டி அருகே கார் கவிழ்ந்து தாய்-மகன் உயிரிழந்த சோகம்
கோவில்பட்டி அருகே தேவர்குளம் ரோடு நான்குவழிச்சாலையில் பாலத்தின் மீது சொகுசு கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்தில் தாய் மற்றும் மகன் பலியாயினர்.;
கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளான கார்.
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (65). இவர், திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி ரேணுகா தேவி (60). மகன் செல்லத்துரை (35) ஆகியோருடன் காரில் சென்று உள்ளார்.
களக்காட்டில் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனைவரும் இன்று தங்களது காரில் சென்னை திரும்பி முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, களக்காட்டில் இருந்து அவர்கள் காரில் புறப்பட்டனர். காரை செல்லத்துரை ஒட்டிச் சென்றாராம்.
அவர்களது கார், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தேவர்குளம் ரோடு நான்குவழிச்சாலை தனியார் ஹோட்டல் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. தடுப்பு சுவரில் மோதிய வேகத்தில் கார் அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரேணுகா தேவி மற்றும் செல்லத்துரை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்க்கு சென்ற காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் அந்தோணி திலீப் மற்றும் போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் காயம் அடைந்த நவநீதகிருஷ்ணனை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் இறந்த ரேணுகா தேவி, செல்லத்துரை ஆகியோரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுங்கசாவடி தனியார் மீட்பு குழுவினரும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.