கோவில்பட்டியில் தற்காலிக காய்கறி சந்தைக்கு அனுமதி மறுப்பு: வியாபாரிகள் போராட்டம்
கோவில்பட்டி அருகே காய்கறி சந்தை இயங்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வியாபாரிகள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மெயின் பஜார் பகுதியில் செயல்பட்டு வந்த தினசரி சந்தை தற்போது கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக, நகராட்சி நிர்வாகம் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு அதற்கான கட்டுமான பணியை தொடங்கி உள்ளது.
இதனால், அங்கு செயல்பட்டு வந்த மொத்தம் மற்றும் சில்லறை காய்கறி விற்பனையாளர்கள் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளத்தில் தற்காலிகமாக சந்தை அமைத்தனர். கடந்த சில நாட்களாக அங்கு சந்தை செயல்பட்டு வந்த நிலையில், சந்தை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்று புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அனுமதி பெறாமல் செயல்படுவதாகக் கூறி அரசு அதிகாரிகள் சந்தை செயல்பட அனுமதி மறுத்தனர். மேலும், இரண்டு நாட்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால், வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் உள்ளனர்
இது தொடர்பாக இன்று கோவில்பட்டி மொத்த வட்டார சில்லறை மற்றும் காய்கறி விற்பனையாளர்கள் சங்க தலைவர் அழகுராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், திட்டங்குளம் பகுதியில் வணிக வளாக சந்தை செயல்பட உரிய அனுமதியை பெற நடவடிக்கை கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த மாதிரியான சூழலில் அதிகாரிகள் அனுமதியை மறுத்தது வியாபாரிகள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், திட்டங்குளத்தில் செயல்பட்டு வரும் தற்காலிக மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் காலவரையின்றி கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அழகுராஜா தெரிவித்து உள்ளார். வியாபாரிகள்போராட்டம் காரணமாக கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் சூழல் உருவாகி உள்ளது.