கோவில்பட்டியில் வீர சக்க தேவி விழாவில் தடையை மீறி ஊர்வலம் சென்றவர்கள் கைது
கோவில்பட்டியில் வீர சக்க தேவி விழாவில் தடையை மீறி ஜோதி எடுத்துச்சென்ற இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரச்சக்க தேவி கோயிலின் 67 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து ஆலய திருவிழாவிற்கு வருபவர்கள் தங்கள் சொந்த வண்டியில் வரவேண்டும், வாடகை வண்டியில் வரக்கூடாது, இருசக்கர வாகனத்தில் தொடர் ஓட்ட ஜோதியை எடுத்துச் செல்லக்கூடாது, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று என காவல்துறையினர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கயத்தாறு மற்றும் இனாம்மணியாச்சி பகுதியில் இருந்து திருமலை நாயக்கர் பேரவை சார்பில் தொடர் ஜோதி ஏந்திய நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி நகர் பகுதி புது ரோடு சாலை வழியாக பாஞ்சாலங்குறிச்சி செல்ல இருந்தனர். அப்போது அவர்கள் இருசக்கர வாகனத்தில் தொடர் ஜோத உள்ளிட்டவைகளை பயன்படுத்தி செல்ல இருந்ததால், காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஜோதி எடுத்துச் சென்றதாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மஹாலில் காவல் துறையினர் அடைத்து வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய அனுமதி அளித்த பிறகு அவர்கள் செல்ல வேண்டும் என்று காவல் துறையினர் தரப்பில் சொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் கயத்தாறு பகுதியில் இருந்தும் தொடர்ஜோதி ஓட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு மீண்டும் அங்கிருந்து அவர்கள் தங்கள் தொடர்ஜோதி ஓட்டத்தை தொடங்கினர்.